பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், இந்த இடத்திற்கு புறத்தே சூழ்ந்திருந்ததால் இத்தலம் 'புறம்பயம்' என்று அழைக்கப்பட்டது. பெண் ஒருவருக்கு ஆதரவாக சிவபெருமான் வந்து சாட்சி சொன்னதால் இத்தலத்து மூலவர் 'சாட்சிநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'சாட்சிநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'கரும்பன்ன சொல்லியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் உள்ள விநாயகர் 'பிரளயம் காத்த விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவர் வெள்ளை நிறத்தில் இருக்கின்றார். இவருக்கு விநாயக சதுர்த்தி அன்று நடைபெறும் தேன் அபிஷேகத்தின்போது தேன் வெளிவராது உள்ளேயே சென்றுவிடும். தட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இக்கோயிலும் ஒன்று. இங்குதான் சனகாதி முனிவர்களுக்கு தென்முகக் கடவுள் தர்மோபதேசம் செய்தார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
|